
பிரபஞ்சத் தோற்றம் அ – உ – ம என்கிற ஒலியில் ஆரம்பித்தது. இதை எல்லா மதக் கோட்பாடுகளும் ஏற்றுக்கொள்கின்றன. இசை என்பது பிரபஞ்சத்தின் மற்றொரு கொடை. இசை என்பது ஒருவரைப் புத்துணர்வுடனும் ஊக்கத்துடனும் இருக்கச் செய்யும் தெய்வீக நுண்கலையாகும். இசையானது இசைப்பவர் மற்றும் கேட்பவர் என இருவரின் மனதையும் ஒரே நேர்கோட்டில் எளிதில் இணைத்து விடும் (Synchronise). முகலாய மன்னர் அக்பரின் அவையில் இருந்த மாபெரும் இசை மேதை தான்சேன். இவர் ’தீபக்’ என்ற ராகத்தைப் பாடி தீபங்களை ஏற்றினார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமி பிலஹரி என்கிற ராகத்தைப் பாடினார். அதன்மூலம் பாம்பு தீண்டி இறக்கும் தறுவாயில் இருந்த ஒருவரை உயிர் பிழைக்க வைத்தார். இவை வரலாற்றில் இடம் பெற்றுள்ளவை. இது போல இசையின் பெருமையைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இசைத் தொடர்பு
ஒருவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் நல்லபடியாக இருந்தால் மட்டுமே இசையின் தொடர்பு கிட்டும் என்பது பொதுவான நம்பிக்கை. ’ஒருவரால் இசை பயில, நல்ல இசையை உருவாக்க மற்றும் நல்ல இசையை வெளிக்கொணர முடியுமா’ என்று ஜோதிடம் மூலம் எவ்வாறு அணுகுவது என்று பார்க்கலாம்.
இசையும் – கால புருஷத் தத்துவமும்
கால புருஷத் தத்துவத்தின்படி இசைக்குரிய பாவகம் 3 மற்றும் 5. புதனுக்கு இரண்டு வீடுகள் இருந்தாலும் 3ஆம் வீடு தான் (மிதுன ராசி) இசைக்குப் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மிதுன ராசியின் குறியீடான இரண்டு சிறுவர்கள் எதிரும் புதிருமாக அமர்ந்து இசைக்கருவியை வைத்திருப்பதைப் பார்த்தும் இதனை யூகிக்கலாம்.
மிதுனம் காற்று ராசியும் கூட.. இசை என்பது ஒழுங்கான அமைப்பிலான (Orchestered) சப்தமானது ரசிகர்களுக்குச் சென்று சேருதலே ஆகும் (reach of the audience). காற்று ராசியும் நெருப்பு ராசியும் இசைக்குரிய இரட்டைத் தண்டவாளங்கள் என்றால் மிகையாது. எனவே மிதுன ராசியும் சிம்ம ராசியும் இசைக்குரிய ராசிகள்.
கிரக காரகத்துவம்
இசை என்பது பல நுட்பங்களை நளினமாகக் கையாளும் முறையாகும். நுண்கலைகளுக்கு (Fine Arts) காரகத்துவமான கிரகம் புதன். மேலும் இது தொலைத் தொடர்புக்குரிய (Communication) கிரகமும் ஆகும். சுக்கிரன் பொழுதுபோக்கு அம்சத்திற்கான கிரகம்.
பாவகங்கள்
இசைக்குக் கீழ்கண்ட பாவகங்கள் செயல்பட வேண்டும்.
லக்னம் – பாடகர் (Performer)
2ஆம் பாவகம் – குரல் வளம் மற்றும் குரல் மூலம் இசை வெளிப்பாடு
3ஆம் பாவகம் – தைரியமான மற்றும் திறமையான இசை வெளிப்பாடு
5ஆம் பாவகம் – இசை நுட்பங்களுக்கான பாவகம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
KP முறையில் இசைத் தொடர்பு ஆய்வு

இசைத்துறைக்கு 5ஆம் பாவக உபநட்சத்திரம் நின்ற நட்சத்திரம் 3ஆம் வீடு மற்றும் சுக்கிரனைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் வீட்டின் உபநட்சத்திரம் நின்ற நட்சத்திரம் 3, 5, 11 வீடுகள் தொடர்பு பெற்று சுக்கிரன், புதன் கிரகத் தொடர்பும் பெற்றால் அவர் இசை பயிலவும் அதனை வெளிப்படுத்தவும் செய்வார்.
இசைக் கல்வி
4ஆம் பாவகம் அடிப்படை இசைக் கல்வியையும் 9ஆம் பாவகம் உயர் இசைக் கல்வியையும் 12ஆம் பாவகம் இசையில் ஆராய்ச்சி மேற்கொள்வதையும் குறிப்பிடும்.
இசைத் தொழில்
10ஆம் பாவகம் 2, 3, 5 மற்றும் 11ஆம் பாவகத் தொடர்பு ஒருவரை இசைத்துறையின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இதனுடன் 7ஆம் பாவகம் இணைந்தால் ஜாதகருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொடுத்து விடும். ஆனால் 9ஆம் பாவகம் தொடர்பு பெற்றால் தொழிலின் பிரபலத்தன்மையைக் குறைத்துவிடும். 1, 3, 5, 10ஆம் பாவகத் தொடர்புகள் உலகப் புகழ் பெறச் செய்து விடும்.
10ஆம் பாவகம் 2, 6 தொடர்பு இசையின் மூலம் வருவாயையும் சேமிப்பு பெருகுவதையும் உறுதிப்படுத்தும்.
பஞ்ச பூதங்களின் மூலம் இசை வகைப்பாடு
ஒருவரது 5ஆம் பாவகம்:
- 2ஆம் பாவகம் மற்றும் காற்று ராசித் தொடர்பு கொண்டால் குரலிசையில் (Vocal music) சிறந்து விளங்குவார்.
- 3ஆம் பாவகம் நெருப்பு ராசித் தொடர்பு பெற்றால் அவர் இசைக் கருவிகள் வாசிப்பார். 5ஆம் பாவக உபநட்சத்திரம் தொடர்பு கொள்ளும் ராசி இசைக்கருவிகள் தன்மையைக் காட்டும்.
நெருப்பு ராசி – தாளக் கருவிகள், தோல் சார்ந்த இசைக் கருவிகள் – தாரை தப்பட்டை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், தபேலா போன்றவை (இந்தக் கருவிகள் குளிர்ச்சியடைந்தால் அவற்றில் இருந்து வெளிப்படும் இசையின் தன்மை பெரிதும் பாதிக்கும். சில தோல் கருவிகளை ஸ்ருதி ஏற்ற நெருப்பில் நேரடியாகக் காண்பிப்பதும் உண்டு).
காற்று ராசி – காற்றின் மூலம் இயங்கும் இசைக் கருவிகள் – ஹார்மோனியம், நாதஸ்வரம், புல்லாங்குழல், ஷெனாய் போன்றவை
பூமி ராசி – தந்தி வாத்தியங்கள் – வீணை, சிதார், கிடார், வயலின் போன்றவை
நீர் ராசி – பல தன்மைகள் கொண்ட இசைக்கருவிகள் – கீ போர்டு, டிரம்ஸ், ஜலதரங்கம் போன்றவை
இவற்றை அறிந்து வைத்துக் கொண்டால் ஒருவர் இசையைப் பயில இயலுமா, ஜாதகருக்கு இசை சார்ந்த தொழில் அமையுமா, இசையில் அவர் பிரகாசிக்க இயலுமா போன்ற தெளிவான பலன்கள் கூற மிகவும் உதவியாக இருக்கும்.

நமஸ்காரம் ஸ்வாமி ஜி,
சிறப்பான கட்டுரை,
நன்றி
LikeLike
A DEEPAVALI GIFT TO THE DEPARTMENT OF ASTROLOGY
LikeLike