இரண்டாம் எதிரி..!

நமது வேதகலாச்சாரத்தில் எதிரிகள் ஆறுவிதமாக இருக்கிறார்கள் என்று கூறுவர். மனிதனின் வீழ்ச்சிக்கு அந்த ஆறு எதிரிகளும் காரணமாக இருக்கிறார்கள். யார் அந்த எதிரிகள் என்று சொல்லுகிறேன். காமம், குரோதம், லோபம், மேதம், மோகம், மாச்சரியம் என்பவை தான் அந்த ஆறு விஷயங்கள். புரியும் படி விளக்குகிறேன்.

  1. காமம் – காம வயப்படுதல், 
  2. குரோதம் – பழிவாங்கும் நோக்கம் கொண்ட கோபம், 
  3. லோபம் – தேவைக்கு மீறி ஆசைகொள்ளுதல், 
  4. மோகம் – ஒரு விஷயத்தில் அதீத நாட்டம் செலுத்துதல், 
  5. மேதம் – ஆணவம், 
  6. மாச்சரியம் – பொறாமை.

இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எதிரி இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள குரோதம்.

ஆறு எதிரிகளில் பெரும்பான்மையான விஷயங்கள் நமக்குத் தெரிந்தது தான் என்றாலும் குரோதம் என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கோபம் கொள்ளுதல் என்பது அடிப்படையான மனித குணம். தான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை என்றாலோ அல்லது ஆணவத்தாலோ தனக்குக் கீழ் உள்ளவர்கள் மீது காட்டுவது கோபம். ஆனால்  ஒரு அவமானம் ஏற்படுகிறது, உரிமைகள் மறுக்க அல்லது நசுக்கப்பட்ட நிலையில் கோபம் கொள்ளுதல் என்பது குரோதம் எனப்படும். 

ஒரு சாதாரண மனிதன் இத்தகைய நிலைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் சக்தியுடன் வெகுண்டு எழுந்து திருப்பி அடிப்பதைக் குரோதம் எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு அதிகாரம் மிக்கவர் தனது அதிகாரத்திற்கு மரியாதை அளிக்கப்படவில்லை என நினைத்து சாதாரண மனிதர்களைப் பழிவாங்குவதும் குரோதம் என வகைப்படுத்தலாம். உள்ளே ஒரு திட்டம் வைத்துப் பழிவாங்கலுடன் கோபத்தைத் தீர்த்துக்கொள்வதையே குரோதம் என்கிறோம். தற்காலத்தில் சமூகவலைதளங்களில் வன்மத்துடன் செயல்படுகிறார்கள் என்ற சொல்லாடல் பிரபலம். வன்மம் கொண்டு உள்ளே ஒரு சித்தாந்தத்துடன் செயல்படுவதைக் குரோதத்தில் சேர்க்கலாம்.

எதற்காக இந்தக் குரோத விளக்கம் என்றால் இந்த வருடத்தின் பெயர் ’குரோதி’.

குரோதியைத் தெரிந்துகொள்ள வேண்டுமானல் குரோதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகத்தைப் பின்பற்றுபவன் ஆன்மீகவாதி; தீவிரமான சித்தாந்தத்தைப் பின்பற்றுபவன் தீவிரவாதி. இதைப்போல யார் எப்பொழுதும் குரோதத்துடன் இருக்கிறார்களோ அவர்களைக் குரோதி என்று சொல்லலாம்.

சித்திரையில் சூரியன் மேஷராசியில் பிரவேசிப்பதைப் புத்தண்டு என்று சொல்லுகிறோம். நமது சாஸ்திரக் கணக்கில் வருடங்கள் 60 எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரபவ வருடம் தொடங்கி அட்சய வருடம் வரை ஒவ்வொரு வருடத்திற்கும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ”பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்” என்ற விளம்பர வாசகம் போல ஒவ்வொரு வருடத்தின் பெயரைப் புரிந்துகொண்டால் அந்த வருடம் நமது மக்களுக்கு எத்தகைய விளைவைக் கொடுக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். ஜெய வருடம் என்பது வெற்றியைக் குறிக்கும். அந்த வருடம் வெற்றிவாய்ப்பு மிக்க சிறப்பான வருடமாக இருக்கும் என்பதை வருடத்தின் பெயரைக் கொண்டே தெரிந்துகொள்ளலாம்.

2019-2020 வருடங்களில் அமைந்த ஆண்டு விகாரி என அழைக்கப்பட்டது. விகாரி என்றால் ‘கோரமான- அருவருப்புமிக்க’ என்று பொருள். அக்காலகட்டம் எப்படி இருந்தது என நமக்குத் தனியாகப் பாடம் நடத்தத் தேவை இல்லை.

புத்தாண்டின் பெயர்களைக் கொண்டு பலன் அறியலாம் என்றாலும் பலர் இவை வடமொழிப் பெயர்கள், நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறுவதைக் கேட்கமுடிகிறது. ஒத்துக்கொள்ளுபவர்களும் ஒத்துக்கொள்ளாதவர்களும் விகாரி வருடம் வறுத்து எடுத்ததை மறக்க இயலாது. சூரியனை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றாலும் கோடைக்காலத்தில் சூரியன் என்னைச் சும்மா விடுவதில்லை. அது போலவே இந்த வருடப் பெயர்களும்.

தமிழ் கலாச்சாரத்தில் சித்தர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சித்தர்களில் முக்கியமானவரான இடைக்கடார் அறுபது வருடப் பெயர்களுக்கும் வெண்பா எழுதி உள்ளார். ஒவ்வொரு வருடத்தையும் பெயர் கொண்டு அறிதல் என்பதைத் தாண்டி அப்பொழுது என்ன நிகழும் என்பதையும் விரிவாகப் பாடல் வடிவில் கூறுகிறார் இடைக்கடார். அவருக்குத் தெரியாதா  பிரப, விபவ என்ற வார்த்தைகள் வடமொழியா தென்மொழியா என்ற அடிப்படை? சித்தர்களுக்குத் தெரியாத தமிழ் தற்காலத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிட்டதோ என்னவோ? அல்லது இவர்கள் நவீன சித்தர்களாக இருப்பார்களோ? என்ற கேள்வியும் எழுகிறது.

2024-2025ஆம் வருடத்தின் பெயர் குரோதி. இவ்வருடத்திற்கு இடைக்கடார் என்ன பாடல் எழுதி உள்ளார் என்று தெரியுமா?

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் – கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்

இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

தனக்கு கிடைக்காமல் போன விஷயங்களைக் கொள்ளையடிக்கும் கள்ளர்கள் அதிகமாவார்கள். நிலையற்ற, பாதுகாப்பற்ற சூழலால் உலகில் மக்கள் அச்சம் கொள்வார்கள். மழைப் பொழிவு குறைந்து விளைச்சல் குறையும். அதனால் உணவு அவசியத்திற்காகக் கள்வர்கள் மிகுவார்கள்.

இத்தனை விஷயங்கள் குரோதமாக வெளிப்படும். அதன் விளைவுகள் குரோதத்தை மேலும் உருவாக்கும். அதனால் தான் இது குரோதி வருடம்.

இடைக்கடார் வருடப்பலன்களை வெண்பா பாடலாக எழுதி உள்ளார் என்றால் அவர் எப்படி எழுதினார்? அருள்வாக்கு போல சித்த நிலையில் இருந்து வானில் இருந்து வந்த ஒலியைப் பதிவு செய்தாரா என்றால் நிச்சயமாக இல்லை..!

சித்தர்கள் அருள்வாக்கு சொல்லுபவர்கள் இல்லை. அவர்கள் அறிவாக்கு சொல்லுபவர்கள். அறிவால் கருத்துக்களைக் கூறுபவர்கள். அறுபது வருடக் கணக்கு என்பது சனி என்ற கிரகமும், குரு என்ற கிரகமும் ராசி மண்டலத்தில் இருக்கும் அமைப்பைக் கொண்டு கூறப்படுகிறது.

14 ஏப்ரல் 2024 முதல் 13 ஏப்ரல் 2025 வரை குரோதி வருடம். ஆண்டு தொடங்கும் காலத்தில் சனி கும்ப ராசியிலும், குரு மேஷ ராசியிலும் இருக்கும். சனி தனது சுயவீட்டில் ஆதிக்கம் பெற்று மூன்றாம் பார்வையாக குருவைப் பார்க்கும். குரு சனியின் பார்வையால் பலம் குறையும். குரு இருக்கும் ராசி நெருப்பு ராசி. இதே போன்று குரு மற்றும் சனி அறுபது ஆண்டுகள் கழித்து ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி மீண்டும் அதே நிலைக்கு வரும். இதனால் அதே சூழல் நமக்குத் திரும்பவும் நடைபெறும். இதன் அடிப்படையில் தான் அறுபது வருடங்கள் என ஒரு வழிமுறையை உண்டாக்கி அதற்கு சித்தர்கள் பலன் கூறினார்கள்.

  2024-2025 குரோதி வருடம்         2083-2084 குரோதி வருடம்

பொதுப்பலன்

 சனி என்பது பொதுமக்களைக் குறிக்கும் கிரகம், குரு என்பது அரசாங்கத்தைக் குறிப்பது. சனியின் ஆதிக்கம் மிகுவதால் அரசின் மேல் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். அரசு மக்களுக்காகச் செயல்படுத்தும் திட்டங்கள் அவர்களைத் திருப்திப் படுத்தாத காரணத்தால் குரோதம் ஏற்படும்.

மேலும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதால் திருட்டு பயம் அதிகமாகும். 

ஏற்கனவே கொடுக்கப்பட்ட சில சலுகைகள் மறுக்கபட்டதால் கலகங்கள் உண்டாகும். ஊழல் குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டு கள்வர்கள் என அடையாளம் காட்டப்படுவார்கள். குழுவாகச் செயல்படும் கொள்ளையர்கள் உருவாகி அவர்களை அரசு அடக்கும். நீர் குறைபாட்டால் விவசாயம் பாதிக்கும். விளைபொருட்களின் விலை ஏறும். நீர் சார்ந்த பங்கீட்டில் சர்ச்சைகள் நடைபெறும்.

அப்படியானால் அறுபது வருடத்திற்கு ஒரு முறை இதேதான் நிகழுமா என்று கேட்டால் ஆம். இது ஒரு சுழற்சி போன்றது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மார்கழி மாதம் என்பது குளிர்காலமாகவும் பங்குனி சித்திரை கோடையாகவும் இருப்பதைப் போல ஒரு சுழற்சியாக நடைபெறும். ஆனால் சில வருடம் குளிர்காலத்தில் அதிகக் குளிரும், கோடையில் குறைவான வெப்பமும் கண்டு இருக்கிறோம் அல்லவா? அது போல பொதுப் பலன்களின் வீரியம் பிற கிரகங்களின் சேர்க்கையைப் பொறுத்து கூடவோ அல்லது குறையவோ செய்யும். 

உதாரணமாக இந்தக் குரோதி வருடத்தில் சனியுடன் செவ்வாய் இணைந்து இருக்கிறது. ஆனால் 2083ல் நடைபெறும் குரோதியில் செவ்வாய் இணைவு இல்லை. இதனால் இந்தக் காலத்தில் ஏற்படும் குரோதி வீரியமாகவும், 2083ல் இருப்பது வீரியம் குறைவாகவும் இருக்கும். செவ்வாய் மட்டுமல்ல பிற கிரகங்களின் சேர்க்கையும் தாக்கத்தை முடிவு செய்யும்.

வருடத்தைப் பற்றி விளக்குகிறேன் என்று ஆராம்பித்து நானும் குரோதம், குரோதி என வன்மத்துடன் எழுதிக்கொண்டு இருக்கிறேன். குரோதி வருடத்தில் சுப பலன்கள் என்பதே இல்லையா? அவற்றையும் பார்ப்போம்.

சுப பலன்கள்

  • தேசிய அளவில் புதிய அரசியல் கட்சிகள் தொடங்கப்படும்.
  • பெண்கள் புதிய துறையில் பெரும் சாதனைகள் படைப்பர்.
  • விண்வெளித்துறையில் இந்தியா புதிய மற்றும் வலுவான தடம் பதிக்கும்.
  • திருமண பந்தங்கள் ஏற்படுவதில் புதிய மாற்றங்கள் வரும்.
  • பங்குச்சந்தை வளர்ச்சி பெறும்.
  • புதிய தொழில் கொள்கைகள் உருவாகும்.
  • சட்டத் திருத்தம் ஏற்பட்டு பலருக்கு நன்மைகள் உருவாகும்.

மீன ராசி நேயர்களுக்கும் கன்னியா ராசி நேயர்களுக்கும் என்ன பலன் நடக்கும் என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு பதில் ”இது மொத்த சமூகத்திற்கும் நடைபெறும் பலன். தனிப்பட்ட ராசிகளுக்கு பலன் என்பது ஜோதிடத்தில் இல்லை” என்பதுதான். தனி நபரின் ஜாதகத்தைப் பொறுத்தே பலன்கள் செயல்படும். ராசிபலன்களைக் கவனிக்கத் தேவை இல்லை. 

பருவகால சுழற்சியில் கோடைக் காலம் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்தவண்ணம் இருக்கிறது. பருவச் சுழற்சியைப் பற்றி அறியாதவர்கள் திடீரென குளிர் திடீர் வெய்யில் என்று புலம்புவார்கள். பருவகாலச் சுழற்சியைப் பற்றிப் புரிந்தவர்கள் கோடையில் குளிர் கொடுக்கும் சாதனத்தையும் குளிர்காலத்தில் இதமான சூடு கொடுக்கும் சாதனத்தையும் உருவாக்குவார்கள். அதுபோல வருட பலன்களை அறிந்து கலக்கம் கொள்ளாமல் இறை உணர்வுடன் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கி மகிழ்வோம்.

Leave a comment